கலைஞர் மரணத்தை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட புகழ் வணக்க கூட்டம் மற்றும் கலைஞர் திறப்பு விழாவை ஸ்டாலின் அரசியலாக்கியிருந்தாலும் அதனை எல்லாம் மனதில் கொள்ளால் ஈ.பி.எஸ் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாக தி.மு.க எம்.எல்.ஏக்களே சட்டசபையில் முனுமுனுத்துச் சென்றனர். 

கலைஞர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தின் மீது அவை முன்னவர் என்கிற வகையில் ஓ.பி.எஸ் பேசினார். அவர் பேசும் போது கலைஞரை எந்த அளவிற்கு புகழ முடியுமோ அந்த அளவிற்கு புகழ்ந்தார். அதாவது கலைஞரின் கலைத்திறமையை மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாகவும் அவர் தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை சுட்டிக்காட்டினார் ஓ.பி.எஸ்.

 

மேலும் ஜெயலலிதாவும் தனிப்பட்ட முறையில் அரசியல் கடந்து கலைஞர் மீது அன்பு கொண்டிருந்ததாக ஓ.பி.எஸ் கூறிய போது சட்டப்பேரவையில் மயான அமைதி நிலவியது. தொடர்ந்து கலைஞரின் பேச்சாற்றல் மட்டும் அல்லாமல் அவரது நிர்வாகத்திறனையும் ஓ.பி.எஸ் புகழ்ந்து தள்ளினார். இதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் தான் ஹைலைட்.  

கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய தொண்டும், அவர் ஆட்சியல் செய்யப்பட்ட சாதனைகளும் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றார். மேலும் கலைஞர் அவையில் இல்லாததை சுட்டிக்காட்டி ஈ.பி.எஸ் வேதனை தெரிவித்தார். மேலும் கலைஞரின் படைப்பாற்றால், எழுத்தாற்றல், நிர்வாகத்திறன், பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு போன்றவற்றையும் சுட்டிக்காட்டி கலைஞருக்கு புகழாரம் சூட்டினார் எடப்பாடியார். 

இரங்கல் தீர்மானத்தின் மீது சம்பிரதாயத்திற்கு சில கருத்துகளை கூறிவிட்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏக்களும் கூட அப்படித்தான் நம்பியிருந்தனர். ஆனால் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலைஞருக்கு சூட்டிய புகழாரத்தால் தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலரும் நெகிழ்ந்து போயினர். 

கலைஞர் புகழ்வணக்க கூட்டத்திற்கு முதலமைச்சர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்பிரதாயமாக கூட ஸ்டாலின் அழைப்பு விடுக்கவில்லை. இதே போல் கலைஞர் சிலை திறப்பு விழாவையும் தேசிய அரசியலில் தி.மு.கவிற்கான இடத்தை உறுதி செய்யும் ஒரு அரசியல் மேடையாக ஸ்டாலின் பயன்படுத்தினார். அங்கு கூட மோடி, எடப்பாடியை விமர்சித்து தான் ஸ்டாலின் பேசினார். 

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட யாருக்கும் ஸ்டாலின் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அதனை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தமிழக அரசியலின் ஒரு மாபெரும் தலைவனுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி கொடுக்க வேண்டிய மரியாதையை மிகச்சிறப்பாக கொடுத்துவிட்டதாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேசிச் சென்றனர். மேலும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு எடப்பாடி இப்படி பேசியிருந்தால் கலைஞருக்கு இன்னும் சிறப்பு கிடைத்திருக்கும் அதற்கான வாய்ப்பை ஸ்டாலின் தவறவிட்டுவிட்டார் என்று சில சீனியர் எம்.எல்.ஏக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.