ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். சிபிஐ நீதிமன்ற உத்தரவுப்படி, 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், நேற்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை மேலும் 12 நாட்கள் அதாவது வரும் 24ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், நான் எனது பசியை இழந்துவிட்டேன். குறைவாகவே உணவு எடுத்துக் கொள்கிறேன். உடல் எடை குறைந்துள்ளது, இதுவும் நல்லதுதானே.? உடல் எடை குறைந்ததால் என் பழைய ஆடைகள் தளர்வாகியுள்ளன. எனவே யாராவது உடல் எடை குறைய வேண்டுமென்று விரும்பினால் சிபிஐக்கு டயல் செய்யுங்கள்.

எனக்கு செல்போன் பேசத் தடை, கையில் வாட்ச் கிடையாது, மணி என்னவென்று சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறேன். இதுவும் நல்ல அனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் மீது குறை சொல்லமாட்டேன் அவர்கள் தொழில்பூர்வமாக என்னை எப்படி நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்துகின்றனர்.

திஹார் சிறையில் என் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனி அறை வேண்டுமென்று கேட்டேன். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.