பீகாரில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி தேர்தலில் நூலிழையில் தோல்வியடைந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ் கட்சி மீதான அழுத்தமும் விமர்சனமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தல் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்திருந்தார்.
உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை என்று கபில்சிபல் குற்றம் சாட்டியிருந்தார்.  பிரச்னைகளுக்குத் தீர்வுகள் தெரிந்தும்கூட காங்கிரஸ் கட்சியினர் அதனைச் செய்வதில்லை என்றும் கபில் சிபல் விமர்சித்திருந்தார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் மாற்று சக்தியாக கருதவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்திருந்தார். கபில்சிபலின் இந்த விமர்சனதுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இந்நிலையில் கபில்சிபலின் இந்தக் கருத்துக்கு சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கபில்சிபலின் கருத்தை ரீட்வீட் செய்துள்ள கார்த்தி சிதம்பரம், “நாம் ஆராய்ந்து, சிந்தித்து, ஆலோசனை செய்து செயல்படும் நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.