திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவிலலை. அந்த தொகுதிக்கு கார்த்தி சிதம்பரமா? சுதர்சன நாச்சியப்பனா ? என கடும் போட்டி.

இதில் ராகுல் காந்தியின் சாய்ஸ் சுதர்சன நாச்சியப்பன் தான். ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். டெல்லியில் இருந்த சுதர்சன நாச்சியப்பனை அழைத்த  ராகுல் ஊருக்கு போய் நாமினேசன் தாக்கல் பண்ணும் பணிகளைப் பாருங்கள் என சொல்லி அனுப்பிவிட்டார். அவரும் உற்சாகமாக தமிழகம் கிளம்பி வந்து விட்டார்.

அதற்குப் பிறகுதான் சிதம்பர ஆட்டம் தொடங்கியது. உடனடியாக  அவர் மன்மோகன் சிங்கை சந்திப் பேசினார். தான் அமைச்சராக இருந்தபோது மன்மோகன் உத்தரவுப்படி எடுத்த கடும் நடவடிக்கைகளால் தான் தற்போது கோர்ட், கேஸ் என்று அலைவதாக உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

எப்படியாவது என்னையும், எனது குடும்பத்தினரையும் மோடியும், சுப்ரமணியன் சாமியும் ஜெயிலில் தள்ளிவிட துடிக்கிறார்கள். இப்போதைக்கு பதவி இருந்தால் தான் எங்களுக்கு பாதுகாப்பு என தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மன்மோகன் சிங், நேராக சோனியாவிடம் இது குறித்து பேசியிருக்கிறார். இந்த நேரத்தில் சிதம்பரம் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி உதவியாக இல்லை என்றால், தொண்டர்களே அதிருப்தி ஆகிவிடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

இதன்பிறகு தான் கார்த்திக் சிதம்பரத்துக்கு விதிகளை தளர்த்தி ராகுல் காந்தி சீட் ஒதுக்கித்  தந்துள்ளார். ஒரு மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் கார்த்தி சிதம்பரத்துக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சுதர்சன நாச்சியப்பனுக்கு மாநிலங்களவை  உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.