சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழகத்தில் என்றுமே இரு மொழிக் கொள்கைதான். தமிழகத்தில் பாஜகவை தவிர மற்ற எந்த கட்சியும் இந்தியை  ஏற்காது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். 
மத்திய அரசு இந்தியைத் திணிக்க நினைக்கக் கூடாது. எப்போதும் இந்தி, இந்து, இந்துஸ்தான் போன்ற கொள்கைகளை பாஜக கைவிட வேண்டும். முதலில் இந்தி தேசிய மொழியே அல்ல. மீன்வளத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசு எப்போதுமே மிகப்பெரிய தொகையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். ஆனால், அதெல்லாம் ஒரு மாயை. அதனால் எந்த பலனும் இருக்காது. 
எல்லையில் சீனா பின்வாங்கி விட்டது; சீனா முன்னேறி வருகிறது என்று மாறிமாறி கூறிவருகிறார்கள். மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகள் இல்லை என்பதையே இது காட்டுகிறது. ரஃபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ரஃபேல் போர் விமானம் தரம் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை. அந்த விமானம் வந்ததில் மகிழ்ச்சிதான்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.