karthi chidambaram demnads to cancel the look out circular

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அறிவித்ததை அடுத்து, லுக் அவுட் சர்குலரை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ-ன் குற்றச்சாட்டையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தேடப்படும் நபர் மீது அவுட்லுக் சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் லுக் அவுட் சர்குலரை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றம் ஒத்தி வைத்தது.