ப.சிதம்பரம் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் அளிக்க முடியுமா? என்று கார்த்தி சிதம்பரம் மத்திய அரசுக்கு சவால் விட்டுள்ளார்.  

சிதம்பரத்தின் கைது குறித்து அவரது குடும்பத்தினரின் நிலைப்பாடு தொடர்பாக மகன் கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடந்த சில நாட்களாக ப.சிதம்பரத்திற்கு எதிராக உறுதி செய்யப்படாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனால், நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ப.சிதம்பரத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். 

'நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் ஒவ்வொரு மனிதரும் நிரபராதியாகத்தான் கருதப்பட வேண்டும்' என்பது சுதந்திரத்தின் அடிப்படைத் தத்துவம். இதனை உணர வேண்டும். உண்மை நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. பொது வாழ்க்கையில் கடந்த 50 ஆண்டுகளாக நேர்மையுடன் ப.சிதம்பரம் பணியாற்றி வருகிறார். 

நாங்கள் மிகச் சிறிய குடும்பம். எங்கள் தேவைக்கு போதுமான சொத்து இருக்கிறது. நாங்கள் அனைவரும் வருமான வரி செலுத்தி வருகிறோம். எங்களுக்கு பணத்தாசை கிடையாது. சட்டவிரோதமாக பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற தேவையும் எங்களுக்கு இல்லை. பல நாடுகளில், பல வங்கிகளில் எங்களுக்கு சொத்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. ப.சிதம்பரம் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் மத்திய அரசால் சமர்ப்பிக்க முடியுமா?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை 30-ம்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் காவல் முடிந்துள்ள நிலையில், மேலும் 5 நாட்கள் சிபிஐ விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.