கர்நாடகத்தில் முதலமைச்சர்  குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இக்கூட்டணியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். இதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது
 
இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது. குமாரசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அடுத்து, இன்று அமைச்சரவைக் கூடடம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை சமாளிக்க முடியாத பட்சத்தில் சட்டப் பேரவைகயைக் கலைக்க முதலமைச்சர் குமாரசாமி பரிந்துரை செய்வார் என தெரிகிறது.

அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முதலமைச்சர் குமாரசாமி இன்று ஆளுநரை சந்தித்து சட்டப் பேரவை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.