Karnataka Secretary of State Ponnani hoped to go to court and call for a public meeting.

திருச்சியில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரனுக்கு மாநகராட்சியிடம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் சென்று முறையிடுவோம் எனவும், பொதுக்கூட்டம் நடக்கும் எனவும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி திருச்சியிலும் டிடிவி தினகரன் தலைமையில் செப்.9 ஆம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்தால் மாநில அரசு அனுமதிக்க கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தது. 

இதைதொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி காவல்துறை தடையையும் மீறி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு கூட்டத்தை ரத்து செய்வதாக டிடிவி தினகரன் அறிவித்தார். 

இதையடுத்து, வரும் 16 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை அருகே நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு டிடிவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் அந்த இடத்தில் அன்றைய நாளில் வேறு ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் வரை சென்று முறையிடுவோம் எனவும் தெரிவித்தார். 

மேலும், சசிகலாவால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எங்களை திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் எனவும், திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.