karnataka governor appointed temporary speaker

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், கர்நாடக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ போபாயாவை ஆளுநர் நியமித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. மஜத-விற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது. எனவே இந்த கூட்டணி சார்பில் குமாரசாமி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அதேநேரத்தில் தனிப்பெரும் கட்சியான பாஜகவும் உரிமை கோரியது.

தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர். போதிய பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரும்பான்மையை எடியூரப்பா நாளைக்கே நிரூபிக்க வேண்டும். நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதியில்லை. வெளிப்படையான வாக்கெடுப்பாகவே அமைய வேண்டும். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்துள்ளார். விராஜ்பேட் தொகுதியில் வெற்றி பெற்றவர் போபையா. நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை இவர் நடத்துவார். இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை சபாநாயகராக இருந்தவர்.

இந்நிலையில், போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்தது சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.