Asianet News TamilAsianet News Tamil

Karnataka Elections : 6 நாட்களில் 22 பேரணிகள்.. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி..

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை முதல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Karnataka Elections: 22 rallies in 6 days.. PM Modi will start election campaign from tomorrow..
Author
First Published Apr 28, 2023, 6:19 AM IST | Last Updated Apr 28, 2023, 6:19 AM IST

கடந்த மார்ச் 29-ம் தேதி கர்நாடக தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடியின் பிஸியான பிரசார அட்டவணையின் முக்கிய சிறப்பம்சமாக பெங்களூருவில் நாளை மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.  இருப்பினும், அடுத்த 15 நாட்களில், பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் 22 பேரணிகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ராகுல்... கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை கவர்ந்த வாக்குறுதி!!

இறுதி அட்டவணை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், பிரச்சாரத்திற்கான அவரது 6 நாள் பயணத்தின் போது, 22 பேரணிகளை நடத்துவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பயணத்தின் போதும், பிரதமர் மோடி 3-க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவார் என்றூ கூறப்படுகிறது.

பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் இதுகுறித்து பேசிய போது "கர்நாடகா தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இது முற்றிலும் வித்தியாசமான விளையாட்டு. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இறங்கும் போது, எங்கள் கட்சி பிரச்சாரம் உச்சத்தை எட்டுவதற்கு இதைவிட பெரிய உத்வேகம் எதுவும் இல்லை," என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி, ஹம்னாபாத், விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் மோடி உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுநாள் ஏப்ரல் 30-ம் தேதி கோலார், சன்னப்பட்டினம் மற்றும் பேலூரில் பிரதமர் மோடி பேரணி நடத்துகிறார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் அடுத்த வாரம் மீண்டும் கர்நாடகா வருகிறார். மே 2ம் தேதி சித்ரதுர்கா, விஜயநகரம், சிந்தனூர், கலபுர்கி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். மே 3-ஆம் தேதி மூடபித்ரி, கார்வார், கிட்டூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மே 6 ஆம் தேதி பிரதமர் மோடி சித்தப்பூர், நஞ்சன்கூடு, துமகுரு , பெங்களூரு தெற்கு ஆகிய இடங்களில் இருக்கிறார். பிரச்சாரம் முடிவடைவதற்கு முந்தைய இறுதி நாளான மே 7 ஆம் தேதி பிரதமர் மோடி 4 பேரணிகளில் உரையாற்றுகிறார். பாதாமி, ஹாவேரி, ஷிவமொக்கா  மற்றும் பெங்களூரு சென்ட்ரல் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

கர்நாடக தேர்தலை பொறுத்தவரை பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக உள்ளனர். அக்கட்சியின் பிரசாரக் குழுவுக்கு முதல்வர் பஸ்வராஜ் பொம்மை தலைமை வகிக்கிறார். தேர்தல் நிர்வாகக் குழுவை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios