karnataka congress mla died in an accident

கா்நாடகா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினா் சித்து நைமா கௌடா இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 78 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பலம் 77 ஆக குறைந்துள்ளது.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது, 15 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 தெதகுதியிலும் 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.

முதலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய பாஜக வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதையடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து மஜக தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தார்.

இதையடுத்து குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் அவர் சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இந்நிலையில்தான் இந்த திடீர் சோகம் நிகழ்ந்துள்ளது.

கா்நாடகாவின் ஜம்காந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்து நைமா கௌடா இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவா – பகல்கோட் சாலையில் துளசிகிளாசி என்ற இடம் அருகே சித்துவின் கார் விபத்துக்குள்ளானதில் அவா் பரிதாபமாக உயிரிழந்தார். 

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் ஜம்காந்தி தொகுதியில் போட்டியிட்ட சித்து அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சோ்ந்த குல்கா்னி ஸ்ரீகாந்த் ஷரபோவாவை 2 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 78 ஆக இருந்த நிலையில் சித்துவின் மறைவுக்குப் பிறகு 77 ஆக குறைந்துள்ளது..