உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களை வேறு மாநிலங்கள் வேலைக்கு எடுத்தால் அதற்கு எங்கள் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்,  இதற்கு உத்தரப்பிரதேச தொழிலாளர்களை வெளிமாநிலங்கள் வேலைக்கு அமர்த்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்திருந்த  உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் 28 லட்சம் பேர் உத்தரப்பிரதேசம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், தங்கள் மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும் போது உத்தரப்பிரதேச மாநில அரசிடமிருந்து முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார், 

இதுகுறித்து தெரிவித்த அவர்,  உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் எங்கள் மாநிலத்திற்குள்ளாகவே வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவை நான் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளேன், மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்,  ஏனென்றால் எங்களது மாநில மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார்,  உத்தரப்பிரதேச மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல யோகி ஆதித்யநாத் அனுமதி தேவையில்லை, தொழிலாளர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்ய உரிமை உள்ளது. 

ஜனநாயகத்தில் ஆட்சி செய்வதற்கான அடிப்படை விதிகள் கூட யோகி ஆதித்யநாத்திற்கு தெரியவில்லை, பொது அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். அவரின் இந்த பேச்சால் அந்த மாநில தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார். பாஜகவுக்கு எது வசதியாக இருக்கிறதோ, அப்போது ஒரே நாடு என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு எது பொருத்தமாக இல்லையோ, அப்போது இந்தியா பல்வேறு மாநிலங்களையும் பல்வேறு மக்களையும்  கொண்டுள்ளதாக கூறி வேறு மாதிரி கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என சிவகுமார் விமர்சித்துள்ளார்.