karnataka chief minister siddaramaiah letter to prime minister modi

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசும் மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கர்நாடக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், பிரதமர் மோடி அவர்களே, நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச விருப்பப்படுகிறேன். அந்தச் சந்திப்பு மிக விரைவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். ஏனென்றால், மத்தியஅரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வரைவு திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக கடந்த வாரம் நாங்கள் இரு திட்டங்கள் அனுப்பி இருந்தோம். அது குறித்து உங்களிடம் பேச விரும்புகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்பதே அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

காவிரி நதிநீர் நடுவர்மன்ற தீப்பாயத்தின் தீர்ப்பு என்பது உத்தரவு கிடையாது அது பரிந்துரைகள் மட்டுமே. காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்ற திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகத்தான் ஸ்கீம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. இதுபோன்ற அமைப்பை உருவாக்குவது என்பது, இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாச்சி முறையைச் சீர்குலைத்துவிடும். மாநில அரசின் நீர்மேலாண்மைக்கான அதிகாரத்தைப் பறிக்கும் விதத்தில் அமைந்துவிடும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.