தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என கமலஹாசன் பேசியதற்கு முதலமைச்சர் சித்தராமையா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கன்னட மொழி பற்றி பேசிய கமலின் கருத்து சர்ச்சையாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமலஹாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை பார்த்து உங்களுடைய கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது எனக் கூறினார். கமலின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கன்டன ரக்ஷண வேதிகே அமைப்பினர் கடும் கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

கமலின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு என்றும், கன்னட மொழியையும் கன்னட கலாச்சாரத்தையும் அவமதிக்கும் விதமாக கமல் பேசி இருப்பதாகவும் அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமலின் படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்படும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெங்களூருவில் ‘தக் லைஃப்’ படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, போராட்டமும் நடைபெற்று வருகிறது. கமல் மன்னிப்புக் கோர வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “கன்னட மொழிக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. பாவம் கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என விமர்சித்தார்.

அதேபோல் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் கமலஹாசனின் கருத்து குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். தேசிய ஒற்றுமை முக்கியமான நேரத்தில் இது போன்ற விவாதம் தேவையற்றது. கன்னட மொழிக்கு என ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. கன்னடமும் தமிழும் பண்டைய மொழிகள் மற்றும் நம் நாட்டின் அடித்தளத்தில் ஒரு பகுதி. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரத்தில் இந்த விவாதம் தேவையா? என கேள்வி எழுப்பினார்.