முன்பு முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரான நிலையில் அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவில்லை. தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே ஜெகதீஷ் ஷெட்டர் வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே பாஜக ஆட்சியில் முன்னாள் துணை முதல்வர்களாக இருந்த ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோருக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்துவருகிறார்கள். 

 கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் ஏற்கனவே போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், துணை முதல்வர் பதவி கிடைக்காத அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால், குமாரசாமி அனுபவித்த குடைச்சல்களை எடியூரப்பாவும் சந்தித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஓராண்டு கழித்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு முதல்வர் பதவியை அடைந்த எடியூரப்பாவுக்குக் கட்டம் சரியில்லை போலும். அமைச்சர்களை அறிவிக்கவே கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக்கொண்டார் எடியூரப்பா. ஒரு வழியாக அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். பதவி கிடைக்காத காங்கிரஸ் கட்சியினராவது கட்சிக்குள்தான் போராட்டம் நடத்தினர். ஆனால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சாலைக்கு வந்து போராட்டத்தை நடத்தி எடியூரப்பாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்கள்.


இதனால் விரக்தியடைந்த ஆர்.அசோக் கட்சியினர் யாரிடமும் பேசாமல் நேற்று வீட்டிலேயே மவுனமாக இருந்தார். புதிய பாஜக தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு ஆர்.அசோக்கை முதல்வர் எடியூரப்பா அவரது வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்தி காரில் அழைத்து சென்றார். இதற்கிடையே ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் பெல்லாரியில் நடுரோட்டில் டயர்களை எரித்தும் போராட்டம் நடத்தினர். உச்சகட்டமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.