கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று கோரி இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குளேயே பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்கினார்கள். மேலும் அங்கேயே சாப்பிட்டு, உறங்கினார்கள். 
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றுவந்தது. கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு காரணமாக, அது தொடர்பாக இறுதி முடிவு கிடைக்கும்வரை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இதன்பிறகு சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அமளி நிலவியதால், துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.


இதனால் பாஜக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. உடனே கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு இடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதன் அடிப்படையில்  முதலில் நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் பிறகு இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இருந்தபோதும்  நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும்வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று எடியூரப்பா அறிவித்தார்.


அதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவை வளாகத்திலேயே தங்கினர். அங்கேயே உணவு அருந்தி தூங்கினர். முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவிலும் ஈடுபட்டார்கள். இதனால் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.