கராத்தே தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியை கே.எஸ்.அழகிரி படுபாதாளத்தில் தள்ளிவிட்டார். சென்னையில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கே.எஸ். அழகிரி கூட்டத்தை நடத்தினார். அதனால்தான் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் பலமாக உள்ளனர். ஆனால், கே.எஸ்.அழகிரி அவர்களை சரியாக வழிநடத்தவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் விரைவில் வருவார்.

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 15 சீட்டுதான் திமுக கூட்டணியில் கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியை திமுக கொஞ்சமும் மதிப்பதில்லை. திமுகவில் ஏகப்பட்ட அதிகார மட்டங்கள் உருவாகிவிட்டன. அந்த கட்சியில் கோஷ்டி சர்ச்சை உள்ளது. காங்கிரஸ் கட்சியை யார் உதாசீனப்படுத்தினாலும் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கக்கூடும். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால்தான் ரஜினி அவரது அரசியல் வருகை குறித்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார். ஆனால், விரைவில் ரஜினி நல்ல முடிவெடுப்பார்” என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.