திமுகவின் அழுத்தம் காரணமாகவே என்னை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் என கராத்தே தியாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சென்னை அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் காமராஜர் பிறந்தநான் விழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர் பேசுகையில், நான் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. திமுக கொடுத்த அழுத்தத்தில் தான் என்னை நீக்கி இருக்கிறார்கள். 

மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் திமுகவிற்காக ஓட்டுப்போடவில்லை என்றும், ராகுல் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என்றும் கூறினார். நான் எம்.பி.யாக வேண்டும், செயல்தலைவர் ஆகவேண்டும் என்று நினைக்கவில்லை. நாங்கள் எங்கள் உணர்வைதான் பிரதிபலிக்கிறோம். கோபண்ணா மீது வழக்கு தொடுக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார். 

மேலும், அவர் பேசுகையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்காதுன்னு மு.க.ஸ்டாலின் சொன்னால் நல்லா இருக்கும். இதனை அழகிரி சொல்ல கூடாது. அழகிரியின் பொறுப்புக்கே நான் வருவேன். இது காங்கிரஸ் கட்சியில் சாத்தியம். கே.எஸ்.அழகிரி தலைமைக்கு கூட விசுவாசமாக இல்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.