கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தற்காலிக சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, அவரே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கர்நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணை தொடங்கியதும் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை தொடங்கினார். அப்போது, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா, எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்தக்கூடாது. போபையா மூத்த உறுப்பினர் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவரது கடந்த கால செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளானவையாக உள்ளன என கபில் சிபல் வாதிட்டார்.