சிவாஜி மகனால் புத்தி தெளிந்த காங்கிரஸ்... எம்.பி.வசந்தகுமார் மகனுக்கு சீட் கொடுத்து மரியாதை...!
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நட்பு ரீதியாக கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோருடன் பழகினாலும் கொள்கையில் உறுதியாக இருந்தவர். காங்கிரஸ் செயல்பாடுகளால் மன வருத்தம் ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகிய போது கூட தனி கட்சி ஆரம்பித்தாரோ தவிர வேறு யார் கட்சியிலும் சேரவில்லை. அப்படிப்பட்ட அவருடைய குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சி தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டது. பிரபல நடிகர்களான ராம்குமார், பிரபு என இரு வாரிசுகளையும் காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. எனவே பிரதமர் மோடியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் கவரப்பட்ட ராம்குமார் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார்.
அதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்த காங்கிரஸ் கட்சி நீண்ட அப்போது அலறி அடித்துக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பெருந்தலைவரைக் கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் கட்சியில் இணைவது எந்த வகையிலும் நடிகர் திலகத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என குமுறியது. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காமல் பாஜகவில் இணைந்தார் ராம்குமார். அப்படி மறுபடியும் ஒரு புகழ் பெற்ற தலைவரின் வாரிசை இழந்துவிடக்கூடாதே?, அப்படி ஏதாவது நடந்தால் தேர்தல் நேரத்தில் பேரியடியாக அமையும் என காங்கிரஸ் கட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எச்.வசந்தகுமாரும் போட்டியிட்டார்கள். இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் ஆகஸ்ட் 28-ம் தேதி உயிரிழந்தார்.
ஆகையால் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுடன், கன்னியாகுமாரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் தான் விஜய் வசந்த் இவருக்குத் தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று முன்கூட்டியே தகவல்கள் வெளியானது. அதைப் போலவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.