kannyakumari dist people want to jion with kerla
எந்த வகையிலும் எங்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு இருக்கும் வரை தாங்கள் அன்னியமாக உணர்வதாகவும், பேசாம எங்க மாவட்டத்தை கேரளாவோடு இணைச்சுட்டீங்கன்னா நாங்க நாங்க நிம்மதியா இருப்போம் என கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சொல்லத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று நேற்று கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஒரு மிகப்பெரிய ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேம்போக்காக அது ஒரு போராட்டமாக தோன்றினாலும், குமரி மாவட்ட மக்களின் மனதில் நீறு பூத்த நெருப்பாக கோபம் கொந்தளித்து கிடக்கிறது.

இவ்வளவு பெரிய புயல் வீசி மாவட்டமே சின்னாபின்னமாகிக் கிடக்கும்போது, மீட்பு நடவடிக்கைகளை கொஞ்சமும் துரிதப்படுத்தாமல் இந்த எடப்பாடி அரசு தங்கள் வாழ்க்கையில் விளையாடி வருவதாக குமரி மக்கள் பொருமிக்கொண்டிருக்கிறார்கள்.
மீனவர்கள் மீட்பு, சீரமைப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு உச்சபட்ச அலட்சியத்தைக் கையாண்டு வருவதாகச் சொல்லி வரும் குமரி மாவட்ட மக்கள், "தமிழக அரசின் செயல்பாடுகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. கேரளாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறோம்" என அறிவிக்க அது பெரும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.
எங்களை விட்டா போதும் என்று மனம் நொந்து சொல்லும் அவர்கள் தமிழகத்தை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒகி புயலின் கோரத்தாண்டவம், குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது. புயல் குறித்த முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால், கடலுக்குச் சென்று புயலில் சிக்கிய மீனவர்கள் பலர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. மீனவர்களின் நிலை குறித்து ஒரு சிறிய அளவு கணக்கெடுப்பு கூட தமிழக அரசால் செய்யப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. மீனவர்களை பறிகொடுத்துவிட்டு ஒவ்வொரு மீனவ குடும்பமும் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இதே போன்று விவசாயிகளும் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். ரப்பர், நெல், வாழை என அனைத்தும் புயலில் நாசாமாகிப்போயுள்ளது.
ஆனால் தமிழக அரசோ புயல் சேதம் குறித்தோ , மீட்புப் பணிகள் குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என கொண்டாடி மகிழ்வது குமரி மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விரக்திதான் கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் கேரளாவோடு இணைத்துவிடுங்கள் என கோரிக்கையாக மாறியிருக்கிறது.

குமரி மாவட்ட மக்கள் விரக்தியில் மட்டுமல்ல, கேரள அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டும் தங்களை கேரளாவுடன் இணைத்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள்.
ஒகி புயல் ஆந்திர கரையோரத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய போது, கேரளா அரசு மிக விரைவாகச் செயல்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறையையும், கடலோரக் காவல்படையையும் தொடர்பு கொண்ட கேரளா அரசு, உடனடியாக மீனவர் மீட்பு பணிகளைத் துவங்கியது.
அடுத்த ஓரிரு தினங்களில் ஏராளமான மீனவர்களை கேரளா அரசு மீட்டது. ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன். ஆனால் கேரளா அரசின் மீட்பு பணிகள் உச்சத்தை எட்டியிருந்த போது தான் எடப்பாடி பழனிசாமி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதமே எழுதியிருக்கிறார்.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் குமரி மக்கள் தவித்து வந்தபோது, தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியிருந்தது கேரளா. அம்மாநில மீனவர்களை மட்டுமல்லாது தமிழக மீனவர்களையும் கூட கேரளா அரசு தன் நடவடிக்கை மூலம் மீட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைப்பு, மீனவர்கள் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருக்கிறார் .

ஆனால் தமிழகத்தில் முதல்வர் ஆய்வு செய்யாததோடு, மக்கள் பிரச்னைகளைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இது மக்களிடையே கடும் அதிருபதியை ஏற்படுத்தியிருக்கிறது.
அது மட்டுமா !! புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட கேரளா அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு, படகுகளை இழந்தவர்களுக்கு படகு வழங்கப்படும்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை பரிந்துரைக்கப்படும் என உடனடியாக அறிவித்தது கேரளா அரசு.
மேலும் பாதிப்பின் தன்மையைப் பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்தது.
ஆனால் மீட்பு பணிகளில் மிகுந்த அலட்சியம் காட்டிய தமிழக அரசு, இழப்பீடு குறித்த அறிவிப்பிலும் அலட்சியம் காட்டியது.

இப்படி தமிழக அரசு மீது உள்ள கடும் கோபம்தான் குழித்துறை மீனவர்களின் போராட்டமாக வெடித்தது. மேலோட்டமாக மீனவர்கள் மீட்புக்கான போராட்டமாக இது தோன்றினாலும், நாங்கள் 1956-க்கு முன்னர் கேரளாவோடு இருந்தோம். போராடி தமிழகத்தோடு சேர்ந்தோம். இப்போது நாங்கள் கேரளாவோடு சேர விரும்புகிறோம் என போராடத் தொடங்கியுள்ளனர்
