தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசட்டும் என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். 

வேலூர் மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுமார் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது வெற்றியே இல்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். 

வேலூரில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழிசை திமுக பெற்ற வெற்றியை என்னால் ஏற்க முடியாது. இது குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அதிமுக தோல்வி என கூறுவதை ஏற்க முடியாது என விமர்சித்திருந்தார். மேலும், திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருவதாகவும் கூறினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில் முதலில் தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு பேசுங்கள் என்றார். எனக்கு தெரிந்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.