அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைக்கும் மத்திய அரசு எப்படி தமிழை வளர்க்கும் என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழை வளர்ப்பதற்காக மத்திய அரசு எவ்வளவு நிதியை ஒதுக்கியிருக்கிறது? அண்மையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழின் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? சமஸ்கிருதம், இந்தி தவிர மற்ற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அரசு தெளிவாக சொல்ல வேண்டும்.

எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் கூட பெயர் வைக்காத மத்திய அரசு, எந்த திட்டத்திற்கும் தமிழ் மொழியாக்கம் இல்லாமல் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் தமிழை எந்த அளவிற்கு வளர்ப்பார்கள் என தெளிவாக புரிகிறது. நம்மால் பெட்ரோலை உணவாக உண்ண முடியாது. அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு என்பது நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று.

தொழிற்துறைகளின் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் விவசாயத்திற்காகவும் தனி இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்டு உணவு தரக்கூடிய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது. எட்டு வழிச்சாலை விவகாரத்தில் என்ன பெயர் மாற்றினாலும் மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என தலைவர் முக ஸ்டாலின் தெளிவாகத் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.