தேர்தல் முடிவிற்கு பிறகு மோடி சும்மா தான் இருக்க போறாங்க.. தமிழ் கற்றுக்கொள்ள ஆசிரியர் அனுப்பவா.? கனிமொழி
மழை, வெள்ளம் வந்தால் நம்மை பற்றி கவலை கொள்ளவில்லை. நமது பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை, ஒரு ரூபாய் நிதி கூட நிவாரணமாக வழங்கவில்லை, ஆனால் தேர்தல் என்று வந்தவுடன், வாரத்திற்கு 5 முறை தமிழ்நாட்டை பிரதமர் மோடி சுற்றிச் சுற்றி வருகிறார் என கனிமொழி விமர்சித்தார்.
திமுக அரசின் திட்டங்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல், பெண்களுக்குப் பேருந்தில் இலவசம் என்ற விடியல் பயணம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பெண் ஒரு மாதத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 800 ரூபாய் மேல் சேமித்து வருவதாகவும் கூறினார். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிற்கே மருத்துவர்கள் சென்று அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
திராவிடமும் பிடிக்காது.. தமிழும் பிடிக்காது
அதுபோல கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர்க்கு வழங்கப்பட்டு, மாதத்திற்கு 1.15 கோடி மகளிர் பயன்பெறுகின்றனர், ஒரு சிலருக்கு விடுபட்டுப் போயிருக்கலாம், விடுபட்டவர்களுக்கு நிச்சயமாகத் தேர்தல் முடிந்தவுடன் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவுப்படுத்தப்படும் என தேரிவித்தார். நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம், நாம் இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம், நேற்று கனடா நாட்டில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாரர். திராவிட மாடல் என்று சொன்னாலே பாஜகவிற்கு அதிரும், பாஜகவிற்குப் பிடிக்காத விஷயம் தமிழ், திராவிடம், தேர்தல் வந்த உடன் இவர்களுக்குத் தமிழ் மீது பற்று வந்துவிட்டது,
ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே தமிழ் படிக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளதாக கூறினார் மோடி. வேண்டுமென்றால் சொல்லுங்கள் தேர்தலுக்குப் பின்பு நீங்கள் சும்மாதான் இருக்கப் போகிறீர்கள், தமிழ்நாட்டில் நிறையத் தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர் அவர்களை அனுப்பி வைத்து உங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்கிறோம் என தெரிவித்தார். மழை, வெள்ளம் வந்தால் நம்மை பற்றி கவலை கொள்ளவில்லை. நமது பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை, ஒரு ரூபாய் நிதி கூட நிவாரணமாக வழங்கவில்லை, ஆனால் தேர்தல் என்று வந்தவுடன், வாரத்திற்கு 5 முறை தமிழ்நாட்டை சுற்றிச் சுற்றி வருகிறார். பாஜக தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் செய்த கட்சி, ஜாதி மதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்து மக்களைப் பிளவுபடுத்திப் பார்க்கக்கூடியது.
மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
மணிப்பூருக்கு செல்லாத மோடி
பாஜக ஆட்சியில் இருக்கும் மணிப்பூரில் தான் இரு இன மக்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி, அன்று பாஜக பற்றவைத்த நெருப்பு இன்று வரை தணியயவில்லை. இன்னமும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தான் உள்ளனர். இரண்டு பெண்களை ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தி கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நம் நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளாரா என்றால் இல்லை, உலகம் முழுவதும் செல்லும் மோடியின் காலடி மணிப்பூரில் பட்டு உள்ளதா என்றாலும் இல்லையென கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்தார்.