திமுக துணைப்பொதுச்செயலாளராக தேர்வானார் கனிமொழி..! புதிய நிர்வாகிகளின் பெயரும் அறிவிப்பு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். காலியாக இருந்த துணை பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி எம்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல புதிய நிர்வாகிகளின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் மறைந்த திமுக முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்பாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
காலியாக இருந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி உருவப்படங்களுக்கு மலர் தூவி கனிமொழி மரியாதை செலுத்திய கனிமொழி துமக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இதே போல துணை பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுகவில் புதிதாக சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உருவாக்கப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.