மக்களவை தேர்தலில் பரபரப்பான தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

தூத்துக்குடி தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அங்கு கடந்த சில மாதங்களாக விசிட் அடித்து பல்வேறு பணிகளை மேற்கொள்வதோடு வாக்காளர்களை கவரும் வகையில் மக்களை சந்தித்து வருகிறார். ஸ்டெர்லைட் விவகாரத்தால் அதிமுக, பாஜக மீது தூத்துக்குடி மக்கள் அதிருப்தியாக உள்ள நிலையில் அது கனிமொழிக்கு சாதகமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. அதோடு தான் சார்ந்த நாடார் சமூகத்தினரின் வாக்குகளும் ( ராசாத்தி அம்மாள் நாடார் சமூகத்தை சார்ந்தவர்) கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறார். 

இந்நிலையில், அவரை எதிர்க்கொள்ள அதிமுக கூட்டணியில் பலமான வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கி அங்கு அக்கட்சியின் தலைவர் தமிழிசையை நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

கனிமொழி நாடார் சமூக வாக்குகளை குறிவித்து களமிறங்குவதை போலவே தமிழிசையும் தான் சார்ந்த நாடார் சமூக வாக்குகள் தாமரையை மலரச் செய்யும்  எனக் கணக்குபோட்டு களமிறங்க தயாராகி வருகிறார் என்கிறார்கள். இதனால் தூத்துக்குடி மக்களை தேர்தலில் நட்சத்திர தொகுதியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.