நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் , தமிழகம் முழுவதும், திமுக, சார்பில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 65 கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவற்றில், கனிமொழி எம்பி பங்கேற்று வருகிறார். இதன் வாயிலாக, தேர்தல் பணிகளை முடுக்கி விடவும், வாக்காளர்களை கெளரவம் செய்யவும் , கனிமொழி திட்டமிட்டுள்ளார். 

துாத்துக்குடி லோக்சபா தொகுதியில், கனிமொழி களமிறங்குகிறார். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதால், மாவட்ட, திமுக,வினரும், கனிமொழி ஆதரவாளர்களும் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.

இதையடுத்து, கனிமொழிக்கு எதிராக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமாரை களமிறக்க, அதிமுக, தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியின், இந்த வியூகத்தை முறியடிக்க, சில திட்டங்களை, கனிமொழி எம்.பி ஆதரவாளர்கள் வகுத்துள்ளனர்.

இதன்படி, அவரது, எம்.பி, நிதியில் இருந்து, காயல்பட்டினத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவமனை, செபத்தையாபுரம், ஹிந்து மேல்நிலைப் பள்ளியில், 23 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்ட உள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, கனிமொழி தலைமையேற்று நடத்த உள்ளனர்.

அதேபோல, திருச்செந்துாரில், திமுக, பூத் ஏஜெண்டுகளுடன், கனிமொழி எம்.பி கலந்துரையாடல் நடத்த உள்ளார். கூட்டத்திற்கு பின், வாக்காளர்களுக்கு பிரமாண்ட கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்த அந்த தொகுதி, MLA, அனிதா ராதாகிருஷ்ணன். 300 கிடாக்களை வெட்டி, கறி விருந்து வைக்க இருக்கிறாராம்.

இது குறித்து, திமுக, மகளிர் அணியினர் கூறுகையில்; துாத்துக்குடி தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காக, குறிஞ்சி நகரில் வீடு எடுத்து, கனிமொழி எம்.பி தங்கியுள்ளார். துாத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு காணவும், சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், வல்லுனர்களின் கருத்துகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கை தயாரித்து உள்ளார்.

துாத்துக்குடி அருகில் உள்ள, நாயுடு, ரெட்டியார் சமுதாயம் அதிகமுள்ள, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிகளில் பணியாற்ற, திமுக, செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணனை களமிறக்க உள்ளோம். மேலும், கூட்டணி கட்சி தலைவரான, மதிமுக, பொதுச் செயலர், வைகோவின் பிரசாரமும், இந்த தொகுதியில் கனிமொழிக்கு கைகொடுக்கும் இதனால் ஆளும் கட்சிகளை அலறவிடுவோம் எனக் கூறுகிறார்கள்.