கருணாநிதி ஒரு தனிப்பிறவி. அரசியலில் சவால்களும், தோல்விகளும் அவரை விரட்டி விரட்டி கொத்தியிருக்கிறது. மனிதர் கலங்கியதில்லை. எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நடிகரால் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி வனவாசம் போக வேண்டிய சூழல் உருவானது. அப்போதும் மனிதர் உடைந்ததில்லை. ஜெயலலிதாவின் போலீஸ் நள்ளிரவில் கோபாலபுரத்தில் ஆடிய ‘கைது’ தாண்டவத்தின்போது கூட  அவரது லுங்கியும் தளரவில்லை, நெஞ்சுரமும் தளரவில்லை. முதிர்ந்த உடலை காவல்துறையின் முரட்டுக் கரங்கள் அழுத்தியபோது வலியால் துடித்தாரே தவிர மன உறுதியை இழக்கவில்லை மனிதர். 

ஆனால் கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக நிதி வந்து சேர்ந்தது எனும் வழக்கில் கனிமொழி கைதானபோது மனிதர் தளர்ந்து நொறுங்கிவிட்டார். ’கனிம்மா!’ என்று கதறினார். தன் அப்பா ராசாத்தி வகையறா மீது வாஞ்சையாக இருப்பதை அவரது மகள் செல்வி ஒரு நாளும் ஏற்றதில்லை. ஆனால், கனி கைதானபோது, அப்பா தளர்ந்ததை செல்வியாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தோள் அமுக்கிய செல்வியிடம் ‘பலியாடு மாதிரி கூட்டிட்டு போறாங்கடா நம்ம வீட்டு பொண்ண!’ என்று உதடுகள் துடிக்க, உடல் நடுங்க பேசினார் கருணாநிதி. அதே கனிமொழி சிறை மீண்ட பின் தான் கருணாநிதியில் தளர்ந்த உடல் சற்று தெம்பானது. 

தனது மற்ற சகோதரர்கள், சகோதரியை விட தன் மீது அப்பா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பது கனிமொழிக்கு நன்றாகவே தெரியும். பல முறை ‘என் உயிரில் பாதி கனிம்மா’ என்று கருணாநிதியே சொல்ல கேட்டிருக்கிறார் கனிமொழி. அப்பாவின் அன்பில் பெரும்பகுதி தன் மீதே இருப்பதில்  கனிமொழிக்கு ஒரு கர்வமும் உண்டு. 

அப்பேர்ப்பட்ட கனிமொழி முதன் முறையாக மக்கள் வழி தேர்தல் அரசியலை சந்திக்கிறார். தூத்துக்குடியில் மிக மிக தீவிரமான பிரசாரத்தில் இருக்கும் கனிமொழியின் நம்பிக்கைக்கு கடும் சவாலாகதான் அமைந்திருக்கிறார் பி.ஜே.பி.யின் மாநில தலைவர் தமிழிசை. தன் பிரசாரமெங்கும் கனியை ‘ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கனிமொழி’ என்றுதான் போட்டுத் தாக்குகிறார். 

இதற்கு பெரும் ஆதங்கத்துடன் பதிலடி தரும் கனிமொழி “என்னுடைய வழக்கு முடிந்துவிட்டது. ஆனால் பி.ஜே.பி.யின் கூட்டணியை பாருங்கள். பா.ம.க.வின் அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ரஃபேல் பூகம்பத்தைக் கண்டு நடுங்குகிறார் மோடி. அமித்ஷா மகனின் சொத்து மதிப்பு பலப்பல மடங்கு ஏறியிருப்பதன் சூட்சமம் என்ன? ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத தமிழிசை, ‘எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு’ என்று நீதிபதியாலேயே தீர்ப்பில் அடிக்கோடிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட என்னைப் பார்த்து விமர்சிப்பது அபத்தம்.’ என்கிறார். 

இவ்வளவு தில்லான கனிமொழியிடம், ‘முதல் முறையாக அப்பா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறீர்களே! மனசு என்ன சொல்கிறது?’ என்று கேட்டதற்கு...

‘அப்பா என்னுடன் இல்லைன்னு நான் நினைக்கலை!’ என்று சொல்லி ஷாக் கொடுத்திருப்பவர்...”அவர் என் அப்பா என்பதுடன் தலைவர் என்பதுதான் மிக முக்கியம். அந்த தலைவர் என்னோடு இல்லைன்னு நான் நினைக்கவேயில்லை. அவர் இந்த கழகத்தின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஊறி நிற்கிறார்.” என்று நெகிழ்ந்திருக்கிறார். 

ஹும்! கருணாநிதியின் மகளுக்கு பேசச் சொல்லி தரவேண்டுமா என்ன?