கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்தவர்கள் போக்கிரிகள், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா ஆகியோர் கந்தசஷ்டிக்கு ஆதரவாக கொந்தளித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் இப்போது ஒரே குரலில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது. இப்போது தமிழகத்தில் ஒரு கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை பற்றி தவறாக சித்தரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலின் செயல் பெரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து தற்போது இந்து மக்கள் அமைப்புகளும் பாஜக மற்றும் இந்து சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த விசயம் அரசியலையும் தாண்டி சினிமா உலகத்தினர் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

 இது குறித்து நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

"போங்கடா முட்டாளுங்களா… முருகனை பத்தி  சொல்ல.. சிவனாலேயே  முடியாதுடா..சுக்குக்கு மிஞ்சிய  மருந்தும்  கிடையாது…  சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய  கடவுளும்  கிடையாது…  சரவணபவாய நமஹ…வெற்றிவேல்  வீரவேல்….நான் பேசற பாஷையும் போட்டுட்டு இருக்குற சட்டையும் தான் உங்க பிரச்சனைன்னா  மாறவேண்டியது நான் இல்லை… நீங்கதான் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரசன்னாவும் தமது கடும் கண்டனத்தை எழுப்பி உள்ளார். எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதசார்பின்மைக்கு நல்லது அல்ல. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரியது.அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மை நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதி முக்கியம் என்று கூறி உள்ளார்.