கமலின் நாக்கை இழுத்து வைத்து வெட்ட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக அதிரடியாக பேசியதையடுத்து அவரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போர்க்கொடி துக்கியுள்ளனர். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவரது கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போது திமுக மற்றும் அதிமுகவுக்கு கவுண்டர் கொடுக்கிறேன் என்ற பேரில் தனது டார்ச் லைட்டால் டிவியை அடித்து நொறுக்கி சாகசம் செய்தார் கமல்ஹாசன். 

இதொடு சும்மாவிடுவாரா டிவியை அடித்து உடைத்த சூட்டோடு இடைத்தேர்தல் களத்திலும் குதித்த கமல் இவ்வாறு எசக்கு பிசகாக பேசி மாட்டிக்கொண்டார். இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கண்டனத்தை கண்டு கமல் கட்சியினர் கொதித்து எழுந்துள்ளனர். நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்க செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திரபாலாஜி அவர்கள் தன் பதவி பிரமாணத்தின் போது, எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கேட்டுக்கொண்டுள்ளார்.