திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடலுக்கு தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திமுக தலைவர் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய கமல்... "கலைத்திரையில் மூத்தவர் கருணாநிதி என்றால் கடைக்குட்டி நான்". தனிப்பட்ட முறையில் குடும்பத்தில் ஒருவரை இழந்த உணர்வே இருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லும் ஆயிரம் ஆயிரம் நடிகர்களில் நானும் ஒருவன் என கூறினார்.

மேலும் கருணாநிதிக்கு உடல் அடக்கத்திற்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில் அண்ணாதுரை இருந்த போது, கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி. ஆகவே மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செளுத்துவதே மாண்பு, என கூறி கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஓதிக்கியே ஆக வேண்டும் என கூறினார்.