சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் நடிகர் கமல்ஹாசன் பேசினார். இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் மீது 50 மேற்பட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஜோதிகுமார் சின்ன தாராபுரம் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் மேள தாளங்கள் முழங்க வீடு வீடாக சென்று டிபன் கேரியர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய மக்களையும் தொழிலாளர் மக்களையும் காப்பாற்றுவதற்காக இத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு தேச துரோகியாக இருக்கிறார்கள். கமல்ஹாசன் பேசியது ஒட்டுமொத்த இந்தியர்களையும் கொச்சைப்படுத்திய பேச்சாகும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், கமலஹாசனை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் துரோகி கமலஹாசன் செயல் மிகவும் வருந்தத்தக்கது என்றும் ஜோதிகுமார் தெரிவித்தார்.