தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகிவருகின்றன. திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற சிறப்பு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக தலைவர்களின் பிரசாரங்கள் நடைபெற்றுவருகின்றன. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு பணிகளோடு சேர்ந்து மக்களையும் சந்தித்துவருகிறார். பிற கட்சிகள் சார்பிலும் தேர்தல் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் குதித்துள்ளார். வருகிற 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் மேற்கொள்ள இருப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் தொடர் பிரசார பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  முதல் கட்டமாக கமல்ஹாசன் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.