மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருப்பங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுக பணம் கொடுப்பதாக புகார் கூறிய திமுக, அமமுகவினர் தேர்தலில் டெபாசிட் பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என விமர்சனம் செய்தார். 

நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசிய அவர் சினிமா துறையில் பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அரசியல் அனுபவமில்லை. அவருக்கு அரசியல் ஒத்து வராது. கமல்ஹாசன் ஒரு நல்ல கலைஞன். தற்போது இந்துக்கள் குறித்து அவர் பேசிய கருத்தால் அரசியலில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார். 

மேலும் பேசிய அவர் மு.க.ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நிலையான கருத்து கிடையாது. உண்மையான காங்கிரஸ் தியாகிகள் யாரும் திமுகவிற்கும் ஓட்டு போட மாட்டார்கள் என கூறியுள்ளார்.