தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், அ.தி.மு.க., தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை அக்கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தும் களம் காண உள்ள நிலையில், எப்போதும் இல்லாத அளவில் தமிழக தேர்தல் களம் கடும் போட்டியை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.  

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்,   “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார். கமல்ஹாசன் போகும் இடமெல்லாம் கூட்டம் கூடி வருவதால் அடுத்த முதலமைச்சர் தான் என கற்பனை கோட்டை காட்டி வருகிறார். அது உலக நாயகன் கமல் ஹாசனை பார்க்க வந்த கூட்டமோ? தவிர அவை அனைத்தும் எப்போதும் ம.நீ.ம-வின் வாக்குகளாக மாறாது என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கமல் ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார். மேலும் அங்காங்கே மக்களுடன் கலந்துரையாடலும் நடத்தி வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்து வரும் கமல் ஹாசன் தனது கட்சி கொள்ளை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு, எனது கட்சியின் கொள்கைகள் வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி அடித்துவிடுவார்கள் என்பதால் வெளியே சொல்லவில்லை என ஏதோ பள்ளி மாணவன் போல் பதிலளித்துள்ளார். 

தேர்தல் பிரச்சார களத்தில் கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி மக்களிடம் தலைவர்களும், வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்து பார்த்திருப்போம். ஆனால் இப்படி வெளியே சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன கொள்கைகளை எல்லாம் கமல் ஹாசன் வைத்திருப்பார்? என்றும், பொறுப்பான கட்சி தலைவராக கொள்கைகளை கூட சொல்ல முடியாதா? என்றும் கமலின் பதிலை கேட்ட ம.நீ.ம. தொண்டர்களும், மக்களும் கடுப்பாகிவிட்டனர்.