எதற்கெடுத்தாலும் வெறும் உண்ணாவிரதம், மறியல், வன்முறை, வெட்டி அதட்டல்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த கட்சிகளுக்கு மத்தியில் இன்றைய பொதுக்கூட்டம் காவிரிப் பிரச்சனைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.  

தமிழகத்தின் அரசியல் களத்தில் காலடி வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த அதிரடியால் ஒட்டுமொத்த அரசியல் கட்சியையும் உற்று நோக்க வைத்துள்ளார். ரஜினிகாந்த்தை முந்திக்கொண்ட கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். மதுரையில் பொதுக்கூட்டம், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என ஒரு பரபரப்பான மோடில் இருக்கும் கமல், அடுத்ததாக இன்று மாலை திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச வந்துள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போதே ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. 

போலியாக உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது. வழக்குகளை மட்டுமே தொடர்ந்து விட்டு அதிமுக அரசால் கை கழுவி விட முடியாது. 
இன்றைய பொதுக்கூட்டம் காவிரிப் பிரச்சனைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இருக்கும்.

நான் சவாலிடுகிறேன்.. இதற்கு முன் சிறிய பெரிய என எந்தக் கட்சியாதவது இதைச் செய்திருக்கிறதா அல்லது செய்ய முயற்சியாவது செய்திருக்கிறதா??

எதற்கெடுத்தாலும் வெறும் உண்ணாவிரதம், மறியல், வன்முறை, வெட்டி அதட்டல்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த கட்சிகளுக்கு மத்தியில் தீர்வை ஆலோசிக்கும் ஒரு பொதுக்கூட்டம் மக்கள் முன்னிலையில். மக்கள் நீதி மய்யம் வெல்லும் வெல்லாது என்பதைத் தாண்டி இந்த புதிய அரசியல் அணுகுமுறை மக்களுக்கு அரசியலின் மேல் ஒரு புதிய புரிதலை உருவாகும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

இக்கட்சியில் இருக்கப் பெருமை கொள்கிறேன் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும், அதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை 5 மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும், காவிரி விவகாரத்தில் 8ஆம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.