தமிழகம் தான் பேச்சு; மக்கள் தான் என் மூச்சு எனவும் கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துவதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் கடந்த 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அவரது அண்ணனின் ஆசி பெற்று தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.

வரும் 8 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது இரண்டாவது மாநாட்டை நடத்துகிறார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். அவர்களிடையே கமல்ஹாசன் பேசினார்.

இதையடுத்து ஆழ்வார்பேட்டை வீட்டில் மக்கள் நீதி மய்யத்தில் சேரவந்த மாணவர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்து பேசினார். அப்போது, மக்களின் நலன் ஒன்றைக் கருத்தில்  கொண்டே மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

  படித்தவர்களும் விவசாயித்தில் ஈடுபட வேண்டும் எனவும் தமிழகம் தான் பேச்சு; மக்கள் தான் என் மூச்சு எனவும் கமல் தெரிவித்தார். 

மேலும் கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துவதாகவும் மாற்றத்தை நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பேசினார். 

என்னை பார்த்து நீங்கள் தலைவா என்று கூற வேண்டாம், நான் உங்களை பார்த்து தலைவா என்று கூறுகிறேன் என்றார். 

மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும் டாஸ்மாக் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.