‘என்னால் உடைந்த டி.வி.யை நான் மாற்றிவிட்டேன். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்’ என்று மநீம தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதன் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இதற்கிடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த கமல் மீது கல், செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டது. நேற்றோடு இடைத்தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இறுதி நாளில் கமல் பிரசாரம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டியோ மூலம் கமல் பிரசாரம் மேற்கொண்டார்.

 
அந்த வீடியோவில், ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...’ என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ காட்சியைப் பதிவேற்றம் செய்துள்ளார் கமல். அந்த வீடியோவில் ஆக்ரோஷமாக பேசும் கமல், ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18 அன்று நடந்த  தேர்தலுக்கு முன்பாக நடந்த தேர்தல் தொடர்பாக வீடியோ வெளியிட்ட கமல், அதில் தலைவர்களின் பேச்சை கேட்டு டி.வி.யை உடைப்பதுபோல காட்டியிருந்தார். கமலின் இந்த வீடியோ விளம்பரம்  சலசலப்பை ஏற்படுத்தியது. அதையும் இணைத்து தற்போதைய வீடியோவில் ஒரு காட்சியில் கமல் பேசுகிறார்.
ஒருவர் டி.வி. ரிமோட்டை கொண்டு வந்த கமலிடம் கொடுத்ததும், “என்னால் உடைந்த டி.வி.யை நான் மாற்றிவிட்டேன்.. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டு கமல் பேச்சை நிறைவு செய்கிறார்.