விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிகழ்ச்சிக்கார வாரத்தில் 2 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு மிகப்பெரிய சம்பளத்தை கமல் பெருவதாக ஏற்கனவே தகவல்கள் உண்டு. அதோடு மட்டும் அல்லாமல் தனது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தை பிரபலப்படுத்தவும் கமல் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாக விமர்சனங்கள் உண்டு. ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உண்டு.

இதனை தனது தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் கமல் இந்த முறை திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கு சரியான  போட்டியாக திகழ்ந்து வருகிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பி மிகவும் அதிகம். மேலும் இந்த இரண்டு நாட்களிலும் நிகழ்ச்சியில் கமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்போது தமிழக அரசியல் நிகழ்வுகளை தொடர்புபடுத்தி கமல் பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம்.

அதே பாணியில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தேர்தல் பிரச்சாரம் போன்று சில அம்சங்களை கடைபிடிக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதை அடிக்கடி எடுத்துக்கூறி தனது தேர்தல் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்த உள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டுமக்கள் நீதி மய்யம் சில பிரச்சார வியூகங்களை வகுத்துள்ளனர். அந்த வியூகங்களை விஜய் டிவி மூலம் செயல்படுத்தும் அரசியல் சதுரங்கத்தை கமல்ஆடக்கூடும் என்கிறார்கள்.

ஏற்கனவே சமூக பிரச்சனைகளை பேசுவதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சர்ச்சைகளை உருவாக்கி டிஆர்பி எகிறும். இந்த நிலையில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தினால் டிஆர்பிக்கு டிஆர்பியும் ஏறும் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திவிடலாம் என்பது தான் கமலின் கணக்கு. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியலும் இருக்கும் என்பதை கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியான குமரவேலே கூறியுள்ளார்.

மேலும் கமல் தனது கடந்த காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக இந்தியன் 2 படம் தொடர்பான அறிவிப்பை பிக்பாஸ் முதல் சீசனின் பினாலேவில் தான் அறிவித்தார் கமல். இப்படி தனது சினிமாவிற்காக நிகழ்ச்சியை பயன்படுத்தியது போல் இந்த முறை அரசியலுக்காக கமல் பயன்படுத்த உள்ளார். இதில் பெரிதாக விவாதிக்க ஒன்றும் இல்லை 
என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.