நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் முக்கிய மூன்று கட்சிகளுமே அதிர வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின்போது கமலின் மக்கள் நீதி மையம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் வாக்குப் பதிவுக்கு பிறகு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் மூலமாக கமல் மற்றும் சீமான் ஆகிய இரு கட்சிகளுமே கணிசமான அளவில் வாக்குகளை பிரித்து இருப்பது தெரியவந்தது. அதிலும் திமுக அதிமுகவிற்கு மாற்றாக ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் கமல் கட்சியை தேர்வு செய்ததாகவும் கிராமப்புறங்களில் சீமான் கட்சியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அவர்கள் இருவரது கட்சிகளுமே சேர்ந்து 7 முதல் 10 சதவீத வாக்குகளை பிரித்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த உண்மையை அறிந்து தான் இடைத்தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுமே தற்போது மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும் கமல் கட்சி வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் செய்ததை விட அதிக அளவில் செலவு செய்து வருகின்றனர். இதற்குத் தேவையான பணம் மேலிடத்திலிருந்து சரியாக சொன்ன நேரத்தில் சொன்ன படி வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். 

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இதற்கும் காரணம் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட கணிசமான தொகை தான் என்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் சீமானும் நிறைந்து வரும் நான்கு தொகுதி நிலவரத்தை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு வருவதாகவும் தேர்தல் பணிகளில் தனது தம்பிகளை ஊக்கப் படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். 

கமல் மற்றும் சீமான் கட்சியினர் கணிசமான வாக்குகளைப் பிரித்தால் அது திமுக மற்றும் தினகரன் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று அதிமுகவினர் குஷியாக உள்ளனர். காரணம் அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியும் போது வாக்கு வங்கி மூலம் தங்கள் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 

அதேசமயம் கமல் மற்றும் சீமான் கட்சியின் செயல்பாடுகள் திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கட்சியும் சாராத பொதுவான வாக்காளர்கள் அந்த இரு கட்சியின் பக்கமும் திரும்பியிருப்பது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று திமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தீவிர சிந்தனையில் இருந்து வருகின்றனர்.