அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்குத்தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. . உத்தரப்பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.

ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்துள்ள இந்த ரத யாத்திரை, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

கேரளாவிலிருந்து தமிழகம் வந்துள்ள  இந்த ரதயாத்திரைமூலம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின.

இந்த ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுளளனர்.

சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சமூக நல்லிணக்கத்திற்காக  நியாயமாக குரல் கொடுத்தால் அதற்கு 144 தடை உத்தரவு போடும் தமிழக அரசு, மக்கள் மனதில் பிளவை உண்டாக்கும் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்திருக்கிறழது என குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில்  தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு  யாருக்கோ சாமரம் வீசுகிறது என  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.