'என் தொடர்பான சர்ச்சைகளை ஊதிபெரிதாக்கி என்னைக் கைது செய்யத் துடிக்கிறார்கள். அவ்வாறு கைது செய்தால் எதிர்பாராத விளைவுகளைத் தமிழக அரசு சந்திக்க நேரிடும்’ என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்.

கமலின் சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியன் இந்து பேச்சு மெல்லப் புகைந்து நெருப்பாகி இன்று பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இடையில் இரு தினங்கள் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் தொடங்கினார். அங்கு அவர் மீது செருப்பு வீசப்பட்டு சர்ச்சையானது. அச்சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளான நேற்று அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்திலும் கமல் மீது அழுகிய முட்டைகளும் செருப்பும் வீசப்பட்டன.

அங்கும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய கமல் விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,’வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

மெரினாவில் பேசியபோது கண்டுகொள்ளாத நிலையில் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது. சூலூரில் பதற்றமான சூழ்நிலை இருந்தால், ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது.கைதுக்கு நான் பயப்படவில்லை. என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை’என்றார்.