அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவன் பெயர் நாதுராம் கோட்சே என்றும் கருத்து தெரிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, இந்து முன்னணி போன்ற கட்சிகள் கமலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர்  கமல்ஹாசன், 'ஹிந்து தான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என, கூறியதில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. 

கமல்ஹாசன் திட்டமிட்டு பேசியுள்ளார். அவர், ஹிந்து என்பதை நான் ஏற்க முடியாது. அவரது சகோதரர் சந்திரஹாசன், 2017ல் லண்டனில் உயிரிழந்த போது, கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்..

கமலஹாசனின் சகோதரி மகன், பாஸ்டருக்கு படித்துக் கொண்டு இருக்கிறார். மக்கள் நீதி மையம் கட்சிக்கு பின்னால், கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன என கூறினார்.


கமல்ஹாசன் ஒரு பேட்டியில், 'நான் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகிறேன்' என, கூறியுள்ளார். அவர், எப்படி தன்னை ஹிந்து என கூற முடியும். கமல் குடும்பமே, கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது என அதிரடியாக தெரிவித்தார்.

ஒரு திரைப் படத்தில், ஹிந்து எதிர்ப்பு உணர்வை, விபூதியை அழிப்பதன் மூலம் காட்டியிருப்பார். எனவே, ஹிந்துக்கள் இதை புரிந்து, கமலை புறக்கணிக்க வேண்டும் என எச். ராஜா தெரிவித்தார்.