சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சாதகமான தொகுதியைத் தேடும் பணியை மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைக்கு 2021-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவருகிறது. அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்குத் தயாராகும் வகையில், கமல்ஹாசனின் பிறந்த தினமான நவம்பர் 7-ம்  தேதி முதல் தேர்தல் பிரசாரத்தையும் அக்கட்சி தொடங்க உள்ளது.


இதற்காக ‘ஆபரேஷன் 500’ என்ற திட்டத்தை முன்வைத்து 500 நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை அக்கட்சி முன்னெடுக்க உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியைத் தேடும் பணியும் தொடங்கி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தேர்தல் நிபுணர் குழுவிடம் இந்தப் பணியை கமல் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலில் அவருடைய சொந்த ஊரான ராமநாதபுரம் அல்லது அவர் சென்னையில் வசிக்கும் தென் சென்னை தொகுதியிலோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்ட கமல், கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார் என்பதால், அவருக்கு சாதகமான தொகுதியைத் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கி உள்ளன. மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகள் உள்பட சாதகமான தொகுதிகளை  ஆராய்ந்து, கமல் போட்டியிடும் தொகுதி தேர்வு செய்யப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.