நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல! ஆனால் இந்துத்வத்துக்கு எதிரானவன். என் அரசியலில் திராவிடம் இருக்கும்: என்று மும்பையில் முழங்கிவிட்டு நேரடியாக கோயமுத்தூர் விமான நிலையம் வந்திறங்கும் கமல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி வழியே ஈரோடு செல்கிறார். அங்கே பல தரப்பு மக்களை சந்திப்பதோடு, நாளை தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.

ஈரோடில் இரு நாட்கள் கமல் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இப்போதைய சூழல் அவரின் ஈரோடு விஜயத்தை உற்று நோக்க வைத்திருக்கிறது. காரணம்? தன்னை அரசியல் வெளியில் முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக பி.ஜே.பி.யின் ஹெச்.ராஜா கிளப்பிய ‘பெரியார் சிலையை அப்புறப்படுத்துவோம்.’ எனும் புயல், லேசாக வலுவிழந்திருந்தாலும் கூட இன்னமும் கரையை கடக்கவில்லை.

பெரியாரிஸத்தை தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடும் நபர் கமல்ஹாசன். அவர் ஹெச்.ராஜா பிரச்னையில் அவருக்கு கண்டனத்தை தெரிவிக்காமல், அவரை எதிர்க்கும் நபர்களுக்கு ’உங்கள் வார்த்தைகளை வீணாக்காதீர்கள்!’ என்று அட்வைஸ் செய்து இந்த விவகாரத்தை விநோத கோணத்தில் அணுகியிருக்கிறார்.
ரஜினி கூட ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று ராஜாவை வகுந்தெடுத்துவிட்ட நிலையில், பெரியாரின் பிள்ளைகளில் தானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன் இதற்கு ரெளத்திரமாக ரியாக்ட் செய்யாதது ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த சூழலில் இரு நாட்கள் ஈரோடு மண்ணில் வலம் வர இருக்கிறார் கமல். ஈரோடு என்பது ஈ.வெ.ரா.வின் சொந்த மண். ஆக அந்த மண்ணில் வைத்து ராஜாவின் ரவுசு பேச்சுகளுக்கு ரவுண்டு கட்டி பதிலடி கொடுப்பாரா கமல்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பெரியாரின் இல்லத்தை சென்று பார்த்து அந்த உணர்வோடு பொங்கித் தீர்க்கலாம் அவர்! என்கிறார்கள் சிலர்.

கவனிப்போம், கமல் அனல் கிளப்புவாரா அல்லது அம்மாஞ்சியாய் நகர்வாரா என்று!