Kamal Hassan speech Hardvare University

எனக்கும், ரஜினிக்கும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதே நோக்கம் என்றும் நான் காவி றித்தை ஏற்கப் போவதில்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த்தும் காவியை ஏற்க மாட்டார் என நம்புவதாக ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி உன்றில் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தேர்தல் அரசியலை தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள் என தெரிவித்த கமல், இவர்கள் இருவரும் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டார்கள் என கூறினார்..



நான் வித்தியாசமானவன் என கூறவில்லை என குறிப்பிட்ட கமல்ஹாசன், ஆனால் அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என்றார். நான் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். பணத்திற்காக அல்ல -மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன்.இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் தேர்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன் என கமல் குறிப்பிட்டார்.

ஒரு ஓட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் 15 லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்வார்கள் என்று கூறிய கமல், அதை எதிர்த்து நம்மால் கேள்வி கேட்க முடியாது என தெரிவித்தார்.

நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. எனது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான். ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். ஆனால், எனது அரசியல் கொள்கையின் நிறம் காவி அல்ல கருப்பு என்று தெரிவித்தார்..

எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. இரண்டாவது, மூன்றாவது மற்றும் 4 ஆவது கட்ட தலைவர்களும் இருப்பார்கள் என்று தெரிவித்த கமலஹாசன், தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல என்றும் கூறினார்.