நாம் அனைவரும் பிரச்சனைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்  என்றும் காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருப்பது தேவையில்லாதது, மறியல் போராட்டங்கள் அரசுக்கு அழுத்தம் தரும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பொன்மலை பகுதியில் நாளை மாலை 6 மணியளவில் மக்கள் நீதி மய்ய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரெயில் மூலம் இன்று  கமல்ஹாசன் திருச்சி வந்தார்.

இந்த பயணத்தின் போது ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் கமல் திட்டமிட்டிருந்ததாகவும்,  அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து நாளை நடைப்பெறவுள்ள மாநாட்டில் அவர் நேரடியாக மக்களிடம் உறையாற்றுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் முன்பு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ரெயிலில் செல்கிறேன் என தெரிவித்தார்.

 உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை அதே நேரத்தில்   மறியல் போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பவை தான் என்றும் கமல் கூறினார்..

எல்லோரும் பிரச்சனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.