மக்களவை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய கமல் கட்சி எதிர்பார்த்ததற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது. இதனால் உற்சாகமான கமல் ஹாசன் கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் இளைஞர் அணி, கிராம அளவிலான குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி முதன் முறையாக மக்களவை தேர்தலில் களமிறங்கினார். கட்சியையும் கொடியையும் அவர் மக்களிடம் பிரபலபடுத்தினார். இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியும் பெரும்பான்மையான வாக்குகளை பிரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனைப் புறந்தள்ளி நாம் தமிழர் மற்றும் அமமுக கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்று சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை தக்க வைத்தது மக்கள் நீதி மய்யம்.

இதனால், திமுக அணிகளுக்கு மாற்று சக்தியாக மக்கள் நீதி மய்யம் வளர்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழுவினர் ஆகியோருக்கு சென்னையில் கமல்ஹாசன் விருந்து அளித்தார். அப்போது, கட்சியின் பலம், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

அப்போது நிர்வாகிகள் விடுத்த ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர் அணி கிராம அளவிலான குழுக்கள், வாக்குச்சாவடிகளை மையமாகக் கொண்ட குழுக்கள் போன்றவற்றை உருவாக்க முடிவு செய்துள்ளார் கமல் ஹாசன்.