உலக நாயகன் கமலை ஆதரிப்பார்களா உள்ளூர் நாயகர்கள்...? கமல் போட்டியிடும் தொகுதி பற்றி புதிய தகவல்!
மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன், போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மநீம தனித்து போட்டியிட உள்ளது.இதேபோல காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில், வரும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த கமல், அது எந்தத் தொகுதி என்பதைப் பற்றி பின்னர் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் வீடும் அலுவலகமும் அமைந்துள்ள தென் சென்னை தொகுதி அல்லது அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் கமல் போட்டியிடுவார் என்று கமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் கமல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தற்போது அக்கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கமல்ஹாசன் தனது கட்சிப் பயணத்தை ராமநாதபுரத்திலிருந்துதான் கடந்த் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னரே மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி முறைப்படி கட்சியைத் தொடங்கினார். ராமநாதபுரத்தில் உள்ள பரமக்குடியில்தான் கமல்ஹாசன் பிறந்தார் என்பதால், ‘மண்ணின் மைந்தன்’ என்ற அடிப்படையில் இத்தொகுதியில் போட்டியிடவே அவர் விருப்பம் காட்டிவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ராமநாதபுரம் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பிலும் பலர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் உலக நாயகன் கமல்ஹாசனை உள்ளூர் நாயகர்களான வாக்காளர்கள் ஆதரிப்பார்களா என்பது தேர்தலில் தெரிந்துவிடும்.